மழை பெய்யும் நேரங்களில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போல கீழே கொட்டுவதால் கீழ்பகுதி வழியாக செல்லும் பயணிகள் நனைந்து செல்ல வேண்டிய அவலநிலை தொடர்கிறது.
மார்த்தாண்டம் பகுதியில் நிலவி வந்த கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் அருகே பம்மம் வரை சுமார் 2.5 கிமி தூரத்திற்கு இரும்பில் ஆன மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பால பணிகள் தொடங்கியவுடன், முறையான திட்டமிடல் இன்றி பணிகள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேம்பால பணிகள் தொடங்குவதற்கு முன் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்றும், இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் முழுமையாக அகன்றுவிடும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டது போல காணப்படும் கட்டடங்களையும், ஆக்கிரமிப்பு பகுதிகளையும் கூட கையகப்படுத்தவில்லை. இதற்காக மேம்பாலம் வளைந்தும், நெளிந்தும் செல்லும்படியும் சில பகுதிகளில் அங்கு உள்ள கட்டடங்களை உரசி செல்லும் வகையிலும் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் முறையான கண்காணிப்பு செய்யாமல் அவசரகதியில் செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.

ஒருவழியாக கடந்த ஆண்டு கன்னியாகுமரிக்கு வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதைத்தொடர்ந்து மேம்பாலம் வழியாக வாகன போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள,; கல்வி நிறுவனங்கள் போன்றவை அமைந்துள்ளன. இதனால, ரோட்டின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரோடு வழியாக டூவீலர்கள் உட்பட அனைத்து வாகனங்களும் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் சென்று வருகின்றன.

மழை பெய்யும் நேரங்களில் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போல கீழே கொட்டுவதால் கீழே உள்ள ரோடு வழியாக டூவீலர் போன்ற வாகனங்களில், செல்பவர்களும, அவ்வழியாக நடந்து செல்பவர்களும் நனைந்து செல்லவேண்டிய அவலங்கள் தொடர்ந்து வருகிறது. மழை தீர்ந்த பின்பும் ஆங்காங்கே மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் கீழே பாய்வதால் வாகனங்களில் செல்பவர்களுக்கும், பாதசாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.

மேம்பாலத்தில் இருந்து மழைநேரங்களில் அருவி போல தண்ணீர் பாயும் என்பதால், மேம்பாலத்தில் இருந்து பைப்புகள் போட்டு தரைப்பகுதியில் உள்ள ஓடையில் சென்று சேரும் வகையில, ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளாதது ஏன் என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். எனவே, அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினரும், அதிகாரிகளும்; மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.