குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, மதுரை, மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களால் குமரி மாவட்டத்தில் கிராமங்கள் வரை கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. கடற்கரை கிராமமான தூத்தூரில் இளம்பெண் ஒருவர் முதலில் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 3 பேர், பங்குதந்தை உள்பட 14 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
50 பேர் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கொல்லங்கோடு, பூதப்பாண்டி, அருமநல்லூர், நாகர்கோவில் பறக்கை, குலசேகரம் என நேற்று முன்தினம் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 47 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் புத்தேரி பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர். இவர் ஒடிசாவில் இருந்து வந்தவர் ஆவார். விரிகோடு பகுதியை சேர்ந்த 42 வயது வாலிபர், 62 வயதான அவரது தந்தை, 58 வயதான அவரது தாயார், மனைவி மற்றும் 12 வயது மகன் உள்பட 5 பேரும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சென்னையில் இருந்து வந்தவர்கள்.
மேலும் தபால் நிலைய ஊழியர், மீன் லோடுமேன் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. இதுதவிர தூத்தூர், பூதப்பாண்டி பகுதிகளை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்தூர் மீனவ கிராமத்தில் நேற்று 47 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்ததில் 2 குடும்பத்தை செரண்ட 8 பேர் உள்பட 14 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால் குமரியில் பாதிப்பு எண்ணிக்கை 299 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 145 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மாலை 25 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், 137 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.






0 Comments