அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த மாத்திரைகள் குறித்து பரவலாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்த அமீரக சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசானி கூறியதாவது:-

அமீரக சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் நோய் மற்றும் சிகிச்சை குறித்து பலரும் கேள்விகள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. தற்போது அமீரகத்தில் கொரோனா தொற்றுள்ள நோயாளிக்கு அளிக்கப்படும் மருந்தின் அளவு சரியானதாகும்.இது நோயாளிக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பக்கவிளைவுகளும் இல்லாதது. இதுபோன்ற விவகாரங்களில் தகவல்களை உறுதி செய்யாமல் மக்களிடையே மனக்குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். தற்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் சிறந்த மருந்தாக உள்ளது. இதில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஏ என்ற வகைக்கு இது சிறந்த எதிர்ப்புபொருளாக உள்ளது.
அமீரக அரசு சிகிச்சைக்கான வழிகாட்டுதல்படி நோயின் தாக்கம் அதிகரித்து உடல் நலம் மிக மோசமாக உள்ளவர்களுக்கு இந்த மருந்து தரப்படுவது இல்லை. மாறாக பெரிதாக உடல் நோய்கள் இல்லாதவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
தற்போது இந்த மாத்திரையின் அளவு சரியாக வழங்கப்பட்டு நோயாளியின் உடல்நல பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மருந்து பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்து என அமீரக சுகாதாரத்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






0 Comments