குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் திருமணம் நடத்த வேண்டுமானால் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
அனுமதி ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருமணம் நடத்தப்பட வேண்டும். நாகர்கோவிலில் உள்ள இருலப்பபுரத்தில் ஒரு மண்டபத்தில் வைத்து நிபந்தனைகளை மீறி அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மண்டபம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மண்டப பொறுப்பாளர்கள், திருமண வீட்டார் மற்றும் கலந்து கொண்ட நபர்கள் மீது காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு மொத்தம் 202 பேர் மீது வழக்குபதிவு செய்யப்படுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுபடுத்துதலில் பொதுமக்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை குறித்து பல்வேறு விதங்களில் அரசினால் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் பொதுமக்கள் அரசின் உத்தரவுகளை மதியாமல் நடப்பது இந்த வைரஸின் தாக்குதலை அதிகரித்துவிடும் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும்.
திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட வீட்டார் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அரசின் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கன்னியாகுமரி மாவடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 518 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 7,843 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments