லடாக் பகுதியில் நேற்று முன்தினம் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் லடாக் மோதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில் “மத்திய அரசின் தோல்வியின் காரணமாக இதயத்தை நொறுக்கும் ஒரு நாளை நாடு காண நேர்ந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது” என்ன கூறினார்.

மேலும் அவர் “சீனா இந்தியாவின் நிலத்தைக் கைப்பற்றிய இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால் பிரதமர் மோடியும், ராணுவ மந்திரியும் மவுனமாக இருப்பதை தவிர வேறு என்ன செய்தார்கள்?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் “ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் லடாக் எல்லை விவகாரம் குறித்து தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் தோல்வியுற்ற மற்றும் கவனக்குறைவான மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்களை கவிழ்க்கவும் உண்மையை நாட்டிலிருந்து மறைக்கவும் மும்முரம் காட்டியது” என குற்றம் சாட்டினார்.

மேலும் “இப்போது நாட்டையும், நாட்டு மக்களையும் நம்பிக்கையில் கொண்டு செல்வது பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் பொறுப்பாகும்“ என்றும் அவர் கூறினார்.