சீனப் பொருட்களை புறக்கணிப்பதுடன், சீனர்கள் தங்குவதற்கு அறை வழங்குவதில்லை என, டில்லி ஓட்டல்கள் முடிவு செய்துள்ளன.லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதையடுத்து, சீனா மீது, நாடு முழுதும், மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.
சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துஉள்ளது.இந்நிலையில், டில்லி ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், சி.ஏ.ஐ.டி., எனப்படும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என, சி.ஏ.ஐ.டி., விடுத்துள்ள கோரிக்கையை, நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.ஓட்டல்களில் சீன பொருட்களை பயன்படுத்துவதில்லை என, முடிவு செய்துள்ளோம். மேலும், சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஓட்டல்களில் தங்குவதற்கு அறை வழங்குவதில்லை எனவும் முடிவு செய்துஉள்ளோம்.

இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இது பற்றி, டில்லி ஓட்டல்கள் சங்கத்தின் செயலர், மகேந்திர குப்தா கூறியதாவது:எங்கள் அமைப்பில், 3,000க்கும் அதிகமான, 'பட்ஜெட்' ஓட்டல்களின் உரிமையாளர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். எங்களின் முடிவு பற்றி, அண்டை மாநிலங்களில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களிடம் தெரிவித்து, அவர்களையும், கடைப்பிடிக்கக் கோரி வலியுறுத்துவோம்.டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களையும் தொடர்பு கொண்டு, இது பற்றி பேசுவோம்.சீனர்களை புறக்கணிப்பதால், எங்களுக்கு நஷ்டம் தான்; ஆனால், நாட்டை விட, இது பெரிதல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.டில்லி ஓட்டல் உரிமையாளர்கள் முடிவை வரவேற்று, சி.ஏ.ஐ.டி., பொதுச் செயலர், பிரவீன் கான்டேல்வால் கூறுகையில், ''சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை, வெற்றி பெறத் துவங்கியுள்ளது. இது பற்றி, பலதரப்பட்ட மக்களிடம் பிரசாரம் செய்ய உள்ளோம்,'' என்றார்.