கழிவு நீரோடைகள் மண் மற்றும் கழிவுப் பொருட்களால் நிரம்பி உள்ளதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை தவிர்க்க சாலைதத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருள கோடு, கல்குறிச்சி, முத்தலகுறிச்சி ,ஆத்தி விளை, தென்கரை,சடையமங்கலம், திக்கணங்கோடு உட்பட 99 கிராம பஞ்சாயத்துகளும் ,இரணியல் ,குமாரபுரம்,வேர்கிளம்பி, முளகுமூடு, கப்பியறை உட்பட 56 டவுன் பஞ்களும் பத்மநாபபுரம் நகராட்சி உட்பட 4 நகராட்சிகளும் 9 யூனியன்களும் உள்ளன.

இந்த உள்ளாட்சி பகுதிகளில் சாலையை ஒட்டி நீரோடைகள் உள்ளன. இந்த ஓடைகளில் கழிவுநீர் வழிந்தோடும் சில இடங்களில் மக்கள் வீடுகள், கடைகள் கட்டும்போது கட்டுமான பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு ஓடைகளை மூடி விடுகின்றனர். இதை கவுன்சிலர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. இதனால் கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் ஆங்காங்கே உடைந்து சின்னாபின்னமாகி உள்ளன. தங்கள் தேவை பூர்த்தியாகும் ஆனபிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மூடிய கழிவு நீரோடையை தோண்டி மண்ணை அகற்றி சீர் செய்வதில்லை.

இதனால் அந்தப் பகுதி அவர்களுக்கு தங்குதடையின்றி வீடுகளுக்கு வாகனங்கள் செல்லும் பாதையாக மாற்றப்பட்டு விடுகிறது. சில பகுதிகளில் கழிவு நீரோடை மிகவும் மோசமாக காணப்படுகிறது.குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து ஆங்காங்கே சாலையில் பாய்கிறது.இதனால் அந்தப் பகுதிகள் வழியாக இருசக்கர வாகனங்கள் ,கார்கள் , வேன்கள் செல்லும்போது சகதியுடன் கூடிய கழிவுநீரை கோரி அடிப்பதால் பாதசாரிகள் அவ்வழியாக நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த அவல நிலை பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் மேட்டுக்கடை டானா முடுக்கு விலவூர் பகுதிக்கு உட்பட்ட மருந்துக்கோட்டை பகுதி குமாரபுரம் பஞ்சுக்குட்பட்ட காஞ்சாங்காடு, சித்திரங்கோடு ஜங்ஷன் வரை மற்றும் வேர்கிளம்பி ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் கழிவு நீர் பாய்கிறது.

இப்பேர்பட்ட அவல நிலை ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தோன்றுவதால் சாலை அரிக்கப்பட்டு நாசம் ஆகிவிடுகிறது. இதனால் அப்பகுதிகளில் படு பாதாள பள்ளங்கள் உருவாகிறது. இதனால் பல ஆபத்துக்களும் தோன்றி வருகிறது.ஆகவே வருமுன் காப்பது போல் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கழிவு நீரோடைகளை சீர்செய்து கழிவு நீருடன் மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு சுகாதார கேடுகளில் இருந்து மக்களை காக்க முடியும் என்பதில் ஐயமில்லை.