குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குளச்சல் பகுதியில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் ஊருக்கு வரும் போது மாவட்ட எல்லையில் பரிசோதனை செய்து தொற்று உறுதியானவர்கள்.
இந்நிலையில் குளச்சல் மீன்பிடி பயிற்சி நிலைய துணை இயக்குநர் அலுவலக இளநிலை உதவியாளர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 25-ம் தேதி ஊருக்கு சென்று வந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது.
மேலும் கோடிமுனையை சேர்ந்த பெண் ஒருவர் குளச்சலில் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனையை நகராட்சி சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். மருத்துவமனையில் இருந்து உள்நோயாளிகள் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் குறும்பனையை சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வந்த குளச்சல் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாணியக்குடி பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும், வாணியக்குடிக்கு சவாரி சென்ற குளச்சல் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும், குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோடிமுனையை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து 5 பேரும் நேற்று தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர்.
குளச்சல் பகுதியில் ஒரேநாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் குளச்சல் சுற்றுவட்டார பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.






0 Comments