குமரி மேற்கு மாவட்ட கடற்பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில் சீற்றம் அதிகமாக ஏற்படும். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. கடந்த 2 நாட்களாக நீரோடி முதல் குளச்சல் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
நேற்று முன்தினம் முள்ளூர்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஆன்டணி (வயது 65), தனது மகனுடன் நாட்டுப்படகில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்ல முயன்றார். துறைமுக முகத்துவாரத்தை கடக்க முயன்றபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் அலையில் சிக்கிய ஆன்டணி மாயமானார். இதையறிந்த அப்பகுதி மீனவர்கள் விரைந்து வந்து முகத்துவார பகுதியில் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டம்துறை புஷ்பநாயகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அதேபகுதியை சேர்ந்த ஷிபு (24), ஜார்ஜ், ஜெஸ்டின், நீரோடி காலனியை சேர்ந்த அவுசேப், ஜாண்பால் ஆகிய 5 பேர் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு கரை திரும்புவதற்காக தேங்காப்பட்டணம் துறைமுக முகத்துவார பகுதிக்கு வந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய படகு தூக்கி வீசப்பட்டது.

இதில் சேதமடைந்த படகு மீனுடன் கடலில் மூழ்கியது. 5 மீனவர்களில் ஜார்ஜ், ஜெஸ்டின், அபுசேப், ஜாண்பால் ஆகிய 4 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். ஷிபு கடலில் மூழ்கி மாயமானார். இதில் பலத்த காயம் அடைந்த ஜாண்பாலை மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாயமான ஷிபுவை தேடும் பணியில் அப்பகுதி மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தேங்காப்பட்டணம் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.