குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் வாழும் மகளிர் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்றுவர இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.

தற்போது இத்திட்டத்தின் கீழ் அதிக அளவில் மகளிர் பயன்பெறும் வகையில், இதுவரையில் 18 வயது முதல் 40 வயது வரை என்றிருந்த வயது வரம்பில் 18 முதல் 45 வயது வரை என உயர்த்தியும், கல்வி தகுதியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி என்றிருந்ததினை தளர்வு செய்து ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும் எனதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் மகளிரில் வருட வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள், கூட்டுறவு சங்கத்தில் மற்றும் கடைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிவோர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் மகளிர் ஆகியோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தகுதியுடைய மகளிர் ஏற்கனவே தெரிவித்தவாறு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த அலுவலகங்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்புள் தெரிவிக்கப்பட்டுள்ளது.