கொரோனா பரவல் அதிகரிக்க அதிகரிக்க, சீனாவின் மீதான கோபம் கூடிக் கொண்டே போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்தது என்றும் அதன் பரவல் குறித்து உரிய நேரத்தில் சீனா தகவல் தெரிவிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தது. இந்த விஷயத்தில் சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, அதற்கான நிதியை நிறுத்தியதுடன், அந்த அமைப்பில் இருந்தும் வெளியேறியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு தொற்று நோய் தடுப்பு வல்லுநர் அந்தோணி ஃபாஸி தெரிவித்துள்ளார். நாம் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். உரிய விதிமுறைகளை அதிகாரிகளும் பொதுமக்களும் கடைப்பிடிக்காவிட்டால் நாள்தோறும் 1,00,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், கொரோனா தொற்று அதன் கோர முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதைப் பார்க்கும் போதும், அமெரிக்காவில் ஏற்படுத்தி வரும் பெரும் சேதத்தைக் காணும் போதும், சீனா மீதான கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கொரோனா பரவல் குற்றச்சாட்டை மறுத்து வரும் சீனா, தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக பதிலளித்துள்ளது.