குமரி மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் பகுதியை சேர்ந்தவர் திரவியம் என்பவர் மகன் சசி (வயது 33). இவர் சென்னை ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். தற்போது சொந்த ஊரில் இருந்து வந்தார்.
இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது. இவரது மனைவி ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளையில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சசி நேற்று தனது நண்பர் நவநீத புவனேஷ் என்பவருடன் குழந்தையை பார்க்க எள்ளுவிளைக்கு சென்றார்.

குழந்தை மற்றும் மனைவியை பார்த்துவிட்டு மாடன்பிள்ளை தர்மம் திரும்பினார். அவர்கள் தம்மத்துகோணம் பகுதியில் சென்ற போது, ஒரு நாய் அவர்கள் சென்ற பைக்கை துரத்தியுள்ளது. இதனால் நிலை தடுமாறி பைக்கை வலதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.

ரத்தவெள்ளத்தில் விழுந்த சசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நவநீதபுவனேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கார் டிரைவர் சாய்ராம் கொடுத்த புகாரின்படி ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிறந்த குழந்தையை பார்த்து திரும்பிய போது வாலிபர் இறந்தது, உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.