கொரோனாவின் மீது பழி போட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% பாடங்களை குறைப்பதாக கூறி கூட்டாட்சி, மதசார்பின்மை உள்ளிட்ட பாடங்களை மத்திய அரசு நீக்கி விட்டதாக மம்தா பானர்ஜி சாடி உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. செப்டம்பர் மாதம் கழித்து தான் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பல பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. ஆனாலும் பள்ளிகளில் நடத்தும் பாடங்களை போல ஆன்லைனில் நடத்த முடிவதில்லை என்பதால் இந்த கல்வியாண்டுக்கான பாடங்களை குறைக்க பெற்றோர், ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ இந்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் 25 முதல் 30% வரை குறைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 25% குறைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வகுப்புகளுக்கும் 30% வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட் செய்துள்ளார்.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி, குடியுரிமை, மதசார்பின்மை ஆகிய பாடங்கள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. அதோடு பிராந்திய அரசுகள் என்ற பாடத்திட்டத்தில் கூட ஏன் பிராந்திய அரசுகள் தேவை என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, திட்டம் குழு மற்றும் ஐந்தாண்டு திட்டம் ஆகிய பாடத்திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனநாயகம், சாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயகத்தின் சவால் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "கொரோனாவின் மீது பழி போட்டு 30% பாடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்திலும் முக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன." என்று மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.