இருநாட்டு ராணுவ தளபதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனப் படைகள் பின் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதற்றம் நீட்டித்து வருகிறது. இதனிடையே, மே 6ம் தேதி நடைபெற்ற இரு நாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தையின் அடிப்படையில், சீன ராணுவ துருப்புகள் சில கிலோமீட்டர் தூரம் பின்வாங்கியது.

இநநிலையில், ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீன எல்லையில் 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஒரு மோசமான சம்பவமாக இது கருதப்பட்டது. இதைதொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வந்ததால் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனிடையே எல்லையில் பிரச்னையை சுமூகமாக தீர்க்கும் வகையில் இரு நாட்டு ராணுவத் தளபதிகள் இடையே கடந்த 1ம் தேதி 3வது முறையாக சுஷூலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தற்போது சீனப்படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்வான் பள்ளத்தாக்கின் கண்காணிப்பு புள்ளி 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இருந்த தங்களது கூடாரங்களை அகற்றிவிட்டு சுமார் 2 கிலோ மீட்டர் வரை சீனப்படைகள் பின்வாங்கியுள்ளது. இதேபோல் இந்திய படைகளும் அப்பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது. அதே சமயம் கல்வான் நதி பகுதியில் உள்ள சீன கனரக கவச வாகனங்கள் இன்னும் பின்வாங்கவில்லை எனவும், இந்திய ராணுவம் நிலைமையை எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.