கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேரூர் திமுக முன்னாள் செயலாளரும், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான பி. ஜெயச்சந்திரன் கொரோனா தொற்று பாதித்த நிலையில் கேரள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (58). இவர் களியக்காவிளை பேரூர் திமுக செயலாளராகவும், 2006 முதல் 2011 வரை களியக்காவிளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சிசிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தொடர்ந்து அன்றைய தினம் இரவு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவரது மனைவி மகேஸ்வரி கேரள மாநிலம், பாறசாலை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

மேலும் இவரது சடலத்தை திருவனந்தபுரம் மருத்துவமனையிலிருந்து களியக்காவிளைக்கு கொண்டு வரும் பணியை சுகாதார ஆய்வாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர்.