ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் வரும் நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அதன் விலை ரூ.1000 ஆக இருக்கும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய பங்குதாரர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் குறித்து தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.
அதில், முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், அந்த தடுப்பு மருந்துகள் எந்தவொரு கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு சக்திகளை தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய பங்குதாரருமான சீரம் இன்ஸ்டிடியூட், 'இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்,' எனக் கூறியுள்ளது.சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது:

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது கட்ட சோதனை செல்வோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அந்த சோதனை முடிவடைய இரண்டிலிருந்து, இரண்டரை மாதங்கள் ஆகும் என நாங்கள் கணித்துள்ளோம். அதன்படி, சோதனைகள் அனைத்தும் சாதகமாக இருந்து, இந்திய மருத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அதனை பாதுகாப்பானது என்று கூறும்பட்சத்தில் வரும் நவம்பரில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.

இந்திய மக்கள்தொகையுடன், சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் பாதி அளவு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 60 மில்லியன் தொகுப்புகளில், இந்தியாவுக்கு 30 மில்லியன் கிடைக்கும். இந்த தடுப்பூசியின் வலை ரூ.ஆயிரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.