குமரி மாவட்டத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 10 நாட்களில் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளது. நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் காய்கறி மற்றும் மீன் சந்தையை மையப்படுத்தி பரவல் தொடங்கியதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
கடந்த 3 நாட்களாக 56, 74, 81 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன்தினம் ஆறுதல் அளிக்கும் வகையில் 35 ஆக இருந்தது. நாள்தோறும் சுமார் 1200 ல் இருந்து 1500 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குணமடைவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் மட்டும் 56 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இவர்களில் பலர் குறைந்த பட்சம் 10 நாட்களில் குணமடைந்தவர்கள் ஆவர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. வழக்கமாக 14 நாட்கள் வரை சிகிச்சையில் இருந்த நிலைமாறி இப்போது 10 நாட்களில் குணமாகி செல்வது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறினர்.
7-வது நாள் நடக்கும் பரிசோதனையிலேயே தொற்று குறைகிறது. பின்னர் 10 வது நாளில் முற்றிலும் இல்லாத நிலை வருகிறது எனவும் டாக்டர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இருந்து கடந்த 26, 27 ம் தேதிகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் 6-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் யாரும் அபாய கட்டத்தில் இல்லை என்பதும் ஆறுதல் தரும் செய்தியாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.






0 Comments