உலகம் முழுவதும் பெருகி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார் ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தடுப்பூசியையும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பரில்தான் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது முன்கூட்டியே இந்த சோதனை நடைபெற இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் மூத்த அறிவியல் அதிகாரி பால் ஸ்டபல்ஸ், இது குறித்து கூறுகையில்,

கொரோனா வைரஸ் தடுப்பூசியை லாப நோக்கமற்று மலிவான விலையில் பொதுமக்களுக்கு கொண்டு வருவதற்காக இடர்பாடுகளை பொருட்படுத்தாமல் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். புதிய தடுப்பூசி உற்பத்தி திறன்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் எங்கள் உலகளாவிய உற்பத்தி பிரிவை விரிவாக்கம் செய்கிறோம்.

நாங்கள் மற்ற நாடுகளில் உள்ள உற்பத்தி பிரிவுகளின் திறன்களையும் உயர்த்துகிறோம். எங்கள் இலக்கு, அடுத்த ஆண்டில் உலகளவில் 100 கோடி 'டோஸ்' தடுப்பூசிகளை வழங்குவது ஆகும். இது பாதுகாப்பானதும், பயனுள்ளதுமாக இருக்கும். நாங்கள் இதுவரை பார்த்த முன்கூட்டிய தரவுகளின் பலத்தின் அடிப்படையில், ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், எங்கள் தடுப்பூசி உருவாக்கும் பணியை விரைவுபடுத்த முடிந்தது.

இந்த (ஜூலை) மாதத்தில் இருந்து எங்கள் தடுப்பூசியை ஒரு சிறிய பிரிவினருக்கு செலுத்து பாதுகாப்பு தன்மையை சோதிப்போம். அதன்பின்னர் படிப்படியாக பெரிய அளவில் ஏராளமானோருக்கு செலுத்தி சோதித்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.