தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் ரூ.138 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். மருத்துவமனையில் உள்ள சிறப்பு வசதிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ், ஜிப்மருக்கு இணையாக இந்த மருத்துவமனை அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படுவதன் மூலம் குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 31,668 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
மக்கள் எந்த அளவிற்கு ஒப்புதல் அளிக்கிறார்களோ அந்த அளவிற்கு கொரோனா தொற்று குறையும் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை கழுவுவது போன்றவைற்றை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார். கொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து ஊரடங்கை பிறப்பித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறினார்.






0 Comments