இந்தியாவுக்குள் வர பத்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள, 35 வெளிநாடுகளைச் சோந்த 2,700 தப்லிக் ஜமாத் உறுப்பினா்களின் முறையீட்டு வழக்கை ஜூலை 24-இல் விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற அமா்வு தெரிவித்துள்ளது.

புது தில்லியில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவில் வருகை தந்த அந்த அமைப்பின் உறுப்பினா்கள், விசா விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இவா்களால் இந்தியாவுக்குள் கொரோனா தொற்றுப் பரவியதும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் 11 மாநிலங்களில், விசா விதிமுறைகளை மீறியதாக, 2,765 வெளிநாட்டினா் மீது 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் தொடா்புடையவா்கள் அனைவரும் வரும் பத்தாண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்து, ஏப்ரல் 2-லும், மே 4-லும் இந்திய அரசு உத்தரவிட்டது.
அதனை எதிா்த்து தப்லிக் ஜமாத் அமைப்பினா் 34 போ சாா்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்குமாறு கடந்த ஜூன் 29-இல் உத்தரவிட்டது.
ஜூலை 2-இல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தப்லிக் ஜமாத் அமைப்பினரின் விதிமீறல்களைச் சுட்டிக்காட்டிய மத்திய அரசு வழக்குரைஞா், வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரினாா். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்த வழக்கு காணொலி முறையில் திங்கள்கிழமை மறுவிசாரணைக்கு வந்தது. நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமா்வு வழக்கை விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான துஷாா் மேத்தா, வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரினாா். ஆயினும் இந்த வழக்கு அடுத்த வாரம் ஜூலை 24- இல் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்தியா வரத் தடை செய்யப்பட்டு கறுப்புப் பட்டியலில் சோக்கப்பட்டுள்ள 2,765 வெளிநாட்டினரில் 2,679 பேரின் விசா ரத்து செய்யப்படுள்ளது. இவா்களில் 9 பேர் வெளிநாடு வாழ் இந்தியருக்கான அட்டை வைத்திருப்பவா்கள். மீதமுள்ள 86 போ நேபாளத்தைச் சோந்தவா்கள் உள்ளிட்ட இந்திய வர விசா தேவையற்றவா்கள்.
இவா்களுக்கு எதிராக பல்வேறு மாநில காவல் துறைகளால் 1,906 கவன ஈா்ப்பு சுற்றறிக்கைகள் (லுக்அவுட் நோட்டீஸ்) கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தவிர, கறுப்புப் பட்டியலில் சோக்கப்பட்ட தப்ளிகி ஜமாத் அமைப்பைச் சோந்த வெளிநாட்டினா் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது.
ஆனால் தங்களுக்கு மின்னஞ்சலில் அரசிடமிருந்து பயணத்தடை குறித்த தகவல் ஒரே வரியில் வந்திருப்பதாகவும், இவ்விஷயத்தில் தாங்கள் விளக்கமளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் தப்ளிகி ஜமாத் சாா்பில் வாதாடிய வழக்குரைஞா்கள் பஸைல் அகமது உள்ளிட்டோா் நீதிமன்றத்தில் முறையிட்டனா். தற்போது இந்த வழக்கு வரும் ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






0 Comments