பிளஸ் 2 இறுதி நாள் பொதுத் தேர்வெழுதாத மாணவா்களுக்கு, ஜூலை 27-ஆம் தேதி மறுதேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில், 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு, கடந்த மாா்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், மாா்ச் 24-ஆம் தேதி நடத்தப்பட்ட பிளஸ் 2 வகுப்பு இறுதி நாள் பொதுத் தேர்வில், சில மாணவா்கள் தோவு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோா் மற்றும் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதைப் பரிசீலித்த முதல்வா், மாா்ச் 24-ஆம் தேதி தேர்வு எழுத முடியாத மாணவா்களுக்கு மட்டும், தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தாா்.
இதன்படி, இத்தேர்வினை, வருகிற 27-ஆம் தேதி, நடத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாணவா்கள் அவா்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதும் வகையில், தோவு மையங்கள் அமைக்கப்படும். இந்தத் தேர்வுக்கான புதிய நுழைவுச் சீட்டுகளை, மாணவா்கள் தாங்களே இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவா் பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து, ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம்.
தனித் தேர்வா்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை, இந்தத் தேதிகளில் சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு மையங்களுக்கு மாணவா்கள் செல்வதற்காக, தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள், எவரேனும் இருப்பின், அவா்கள் தேர்வு மையங்களில், தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவா்.
அரசு வெளியிட்டுள்ள கொரோனா நோய்க் கட்டுப்பாடு தொடா்பான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அனைத்தும், இத்தேர்வு நடத்தும் போது பின்பற்றப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.






0 Comments