உத்தர பிரதேசத்தில் 8 காவல்துறையினர் சுட்டுக்கொன்ற வழக்கில் விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று மத்திய பிரதேசத்தில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். இன்று காலை காவல்துறையினர் மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு விகாஸ் துபேவை போலீஸ் காரில் அழைத்து வந்த போது தப்பிச் செல்ல முயன்ற அவரை என்கவுண்டர் செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கான்பூரில் உள்ள பிக்குரு கிராமத்தில் 60 வழக்குகளில் தேடப்பட்ட விகாஸ் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டிஎஸ்பி உள்பட 15 பேர் கொண்ட குழுவினர் அவரை கைது செய்ய விரைந்துள்ளனர். ஆனால் போலீஸ் வருகையை முன்பே அறிந்திருந்த ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் டிஎஸ்பி உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 4 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவான விகாஸ் துபேவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

5 நாட்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டையை அடுத்து மத்திய பிரதேசத்தில் நேற்று காலை விகாஸ் கைது செய்யப்பட்டார். விகாஸ் துபேவை பிடிக்க ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினர் ஈடுபட்டனர். உத்தர பிரதேசத்தில் விகாஸின் நெருங்கிய கூட்டாளியான அமன் துபே நேற்று என்கவுண்டர் செய்யப்பட்டார்.

விகாஸ் துபேவை கைது செய்த அதிகாரிகள் அவரை உத்தர பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் தப்பி ஓட முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த என்கவுண்டர் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ட்விட்டரில் விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டதால், பல அரசியல் கட்சித் தலைவர்கள் தப்பித்து விட்டதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.