கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பலர் வெளியிடங்களில் அச்சமின்றி சுற்றி வருகின்றனர். ஆனால் கொரோனா அறிகுறி இருப்பவர்களை கண்டால் அனைவரும் தெறித்து ஓடுகின்றனர்.
அந்த வகையில், கொரோனா தொற்று உறுதியான தாயை அவரது மகன் பேருந்து நிலையத்தில் பரிதவிக்க விட்டு சென்ற வேதனையான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் 68 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார். இதனை கண்ட மக்கள் சந்தேகம் அடைந்து அவரிடம் சென்று பேசினர்.

அதற்கு பதிலளித்த அந்த மூதாட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று மாச்சர்லா வந்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தனக்கு உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், தனது மகன் இங்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டதாகவும் அந்த மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து அவரை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், அந்த மூதாட்டி அமர்ந்திருந்த சுற்றுப்பகுதியில் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் குண்டூர் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.