கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில், சீனா உள்ளிட்ட எந்த நாட்டுடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனாவால் இன்று உலகமே சிக்கித் தவித்து வருகிறது. இதில் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை 41 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,46,185 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் ஏற்பட்ட பாதிப்புக்கு சீனாதான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனிடையே, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் விரைந்து தடுப்பூசி கண்டுபிடிப்பது அவசியமாகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சீனா உள்ளிட்ட எந்த நாடேனும் நல்ல முடிவைப் பெற்றால் அவற்றுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், கொரோனா தடுப்பூசி விஷயத்தில் நல்ல முடிவு கிடைப்பதற்காக யாருடனும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும், கொரோனா சிகிச்சை முறையிலும் அமெரிக்கா மேம்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ள அவர், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக அது பயன்பாட்டுக்கு வரும் என்றும், அதன் விரைவான விநியோகத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.






0 Comments