சாதாரண மக்கள் முதல் டாக்டர், நர்சுகள், போலீசார், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரையும் கொரோனா தொற்று மிரட்டுகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் குமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியான வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதேபோல் 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் ஆகியோரும் தொற்றுக்கு ஆளானார்கள். பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டு தற்போது வீடு திரும்பி உள்ளனர்.
அதிகரிக்கும் தொற் றால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ தாண்டி சென்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 1,538 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இதேபோல் குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 பேரும், அதிகபட்சமாக 7 பேர் வரையிலும் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரை 5 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கியது. அதாவது, நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருடைய உடல்நிலை மோசமான நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், நாகர்கோவில் கோணம் பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி, கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 66 வயது டாக்டர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார்கள்.

குமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 92 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது. நேற்று புதிதாக 5 பேர் பலியானதால், அவர்களையும் சேர்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு பலியானவர்களது எண்ணிக்கை கணக்கிடப்படாமல் இருந்ததாக தெரிகிறது. அதாவது இறந்த 28 பேர் பலி எண்ணிக்கையில் சேர்க்கப்படாமல் இருந்துள்ளது.

நேற்று அந்த எண்ணிக்கையையும் சேர்த்து (அதாவது 28 பேரையும்) பலி எண்ணிக்கை 125 ஆக உயர்ந்தது என்று குமரி மாவட்ட சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், தனியார் ஆஸ்பத்திரிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை சரியாக கணக்கிடப்படாமல் இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது தான் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தான் பலியானோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். கொரோனாவுக்கு 125 பேர் இறந்துள்ளனர் என்ற தகவல் குமரி மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 26 பேர் இறந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்றும் குமரி மாவட்டத்தில் 119 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,787 ஆக உயர்ந்துள்ளது.