குடியரசு கட்சி சார்பில் 2வது முறையாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு பேசிய டிரம்ப், 'கொரோனா பெருந்தொற்றை தடுப்பூசி உதவியுடன் இந்தாண்டுக்குள் ஒழித்துக்கட்டுவோம்' என்றார்.

அமெரிக்காவில் வரும் நவ., மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் 2வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பளாராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீசும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் சீனாவுடனான வர்த்தகப் போர், கொரோனா வைரஸ் பிரச்னை, தடுப்பூசி தயாரிப்பு ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.
தற்போது அமெரிக்காவில் 60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 சதவீதம் பேர், அதாவது 33 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இதுவரை 1.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் அதிபர் வேட்பாளராக கட்சி சார்பில் 2வது முறை அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு மக்களிடம் டிரம்ப் உரையாற்றினார். அதில், ''குறைந்த நேரத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்காக அமெரிக்காவின் தலைசிறந்த விஞ்ஞானிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கிடைத்துவிடும். அவற்றை கொண்டு கொரோனாவை ஒழித்துக்கட்டலாம். நம்மிடம் தற்போது 3 தடுப்பூசிகள் உள்ளன. அவை விரைவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் கிடைக்கும்,'' என்றார்.






0 Comments