துபாய் - கோழிக்கோடு விமான விபத்தில் ஒரு வயதேயான குழந்தை தனது தாயுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய அரசின் சார்பில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் துபாயிலிருந்து கிளம்பி கோழிக்கோடு நோக்கி வந்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 190 பேரில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் பலியாகினர். மேலும் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
22 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒரு வயதேயான ஆசாம் முஹம்மது என்ற குழந்தை தனது முதல் விமனப்பயணத்தில் தாயுடன் பலியான சோகம் நடந்தேறியுள்ளது.
கோழிக்கோடு வெல்லிமடுகுன்னூவைச் சேர்ந்த நிஜாஸ் மற்றும் சாகிரா பானு தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் உள்ளனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கரோனா தொற்று பரவல் காரணமாக துபாயிலிருந்து பானுவும் அவரது குழந்தைகளும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் கேரளாவிற்கு பயணமானார்கள்.
வெள்ளிக்கிழமை கோழிக்கோட்டில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் தாய் சாகிரா பானு மற்றும் ஒரு வயது குழந்தையான ஆசாம் முஹம்மது பலியாகினர். விமானம் தரையிறங்கும் நேரத்தில் குழந்தை ஆசாம் தாயின் மடியில் இருந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான தனது தாத்தா முகமது மாஸ்டரைப் பார்க்க வந்த அந்தக் குழந்தையின் பயணம் இறுதிப் பயணமாக அமைந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த விபத்துக்குப் பிறகு, பானு கோண்டோட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிரக் காயங்களுடன் இருந்த அவர் பின் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பானுவின் குழந்தைகள் இருவேறு மருத்துவமனைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தனது பிஞ்சு பாதத்தைப் பதிக்க வந்த குழந்தை விமான விபத்தில் பலியான சம்பவம் அனைவரையும் கன்ணீரில் மூழ்கடித்துள்ளது.






0 Comments