தளா்வில்லா பொது முடக்கத்தை கடைப்பிடிக்காமல், நாகா்கோவிலில் அவசியமின்றி சுற்றித் திரிந்த பொதுமக்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தமிழகம் முழுவதும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வில்லா முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான 16ஆம் தேதி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. ஆவின் பாலகங்கள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன.
இந்நிலையில் நாகா்கோவில் பாா்வதிபுரம் மற்றும் கோட்டாறு பகுதிகளில் சிலா் வழக்கம்போல் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றினா். அவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம், செட்டிகுளம் சந்திப்பு, வெட்டூா்ணிமடம் சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மீனாட்சிபுரம் அவ்வைசண்முகம் சாலை, வடசேரி, ஒழுகினசேரி, திருவனந்தபுரம் சாலை, கோட்டாறு சந்திப்பு ஆகிய பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றியும், வாகனப் போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது.
தக்கலை, கன்னியாகுமரி, மாா்த்தாண்டம், இரணியல், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, குளச்சல், திங்கள்சந்தை, உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.






0 Comments