நாகர்கோவிலில் வடசேரி – ஒழுகினசேரி இடையே பாதாள சாக்கடை பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பிராதன பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் பல பகுதிகளிலும் குடிநீர் திட்டத்திற்கும் குழாய்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இரண்டு திட்ட பணிகளும் நகர பகுதியில் பிரதான சாலையில் நடைபெற்று வருவதால் பெரும்பாலான சாலைகள் உடைக்கப்பட்டு பள்ளங்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல சாலைகள் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் வடசேரி – ஒழுகினசேரி இடையே நேற்று தொடங்கியது. திருவனந்தபுரம் முதல் திருநெல்வேலி மார்க்கம் செல்லும் அனைத்து வாகனங்களும், தக்கலை, களியங்காடு, இறச்சகுளம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி மார்க்கமாக செல்லவேண்டும் என்றும், வடசேரி முதல் திருநெல்வேலி செல்லும் அனைத்து வாகனங்களும் இறச்சகுளம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி மார்க்கமாக செல்ல வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றம் மறு உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வடசேரி, ஒழுகினசேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேவேளையில் வெளியூரில் இருந்து வருகை தரும் வாகனங்கள் பலவும் சாலை மூடப்பட்டுள்ளதால் வடசேரி அண்ணா சிலை பகுதியில் வந்து சேர்ந்ததும் எங்கு செல்ல வேண்டும் என்பது தெரியாமல் திணறினர்.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அசம்புரோடு வழியாகவும் பல வாகனங்கள் திரும்பி சென்றன.