அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தாலும் ‘குண்டு’ பீதி மட்டும் அடங்கவில்லை. ஆம், குண்டு என்றதும் ஏதோ என்று நினைக்க வேண்டாம்; உடல் பருமனாக இருப்பவர்கள் இன்னமும் பீதியுடன் தான் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு துவங்கிய மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை ஆரம்பத்தில் அதிகரித்த அளவுக்கு இப்போது இல்லை; இருந்தாலும் எதிர்ப்பு சக்தி இல்லாமல், அதிக வயது என்ற காரணத்தால் தான் பலியானார்களா என்று ஒரு பக்கம் ஆய்வு நடந்தாலும், உண்மையில், முக்கிய காரணம், வயதானவர்கள் தவிர இறந்தவர்கள் பெரும்பாலோர் குண்டாக இருந்தவர்கள்; உடல் பருமன் கொரோனா பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்தபோது, நியூயார்க், நியூஜெர்சி அதை சுற்றிய மாகாணங்களில் தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. அப்போது, வேகமாக ஐசியு வார்டுகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபோது, டாக்டர்கள் இது தொடர்பாக யோசிக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிகரித்த நிலையில், மருத்துவ ஆய்வாளர்கள் கவனத்தை ஒரு காரணம் பெரிதும் ஈர்த்தது. அது தான் உடல் பருமன்.

அதிகம் பாதிக்கப்பட்ட பல மாகாணங்களிலும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டோர், இறந்தவர்கள் என்று கணக்கிட்டபோது, நூற்றுக்கு 90 சதவீதம் பேர் உடல் பருமனாக இருந்தவர்கள். 40 மற்றும் அதற்கு அதிகமாக பிஎம்ஐ என்று சொல்லப்படும் உடல் மொத்த எடை. உயரம் மற்றும் எடையை கணக்கிட்டு பார்த்தால் ஒருவர் உடல் பருமனாக இருக்கிறாரா என்பது அறிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் பொதுவாகவே உடல் பருமனாக இருப்பவர்கள் கணிசமாக உள்ளனர். 35 கோடி மக்கள் தொகையில், ஒரு கோடிேயே 20 லட்சம் பேர் உடல் பருமனாக இருப்பவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் தான் கணிசமான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் பருமன் பிரச்னை அமெரிக்காவை பொறுத்தவரை பல ஆண்டாகவே உள்ளது. இவர்களுக்கு எந்த தடுப்பூசியும் பலனளிக்காது. ப்ளூ காய்ச்சல், எலிக்காய்ச்சல், டெட்டனஸ் போன்றவற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தும் போது, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் பலனளிக்காமல் போய்விடும் என்பது தெரிந்தது தான். இதனால் தான் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தாலும், இவர்களுக்கு பலன் தருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. உடல் பருமன் காரணம் என்று கண்டறிந்ததும், டாக்டர்கள் உடனே ஒரு எச்சரிக்கை விடுத்தனர். ‘பிஎம்ஐ 30க்கு மேல் இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். 40க்கு மேல் இருப்பவர்கள் கண்டிப்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அமெரிக்கா முழுவதும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்தே பொது ஊரடங்கு என்பது இல்லை. அந்தந்த மாகாண கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே டெக்சாஸ் உட்பட பல மாகாணங்களில் ஊரடங்கு என்ற நிலையே இல்லை. மக்கள் இன்னமும் வியாபாரம், தொழிலுக்கு வெளியில் போய்க்கொண்டு தான் இருக்கின்றனர்.

டாக்டர்கள் எச்சரிக்கையை அடுத்து, உடல் பருமன் உள்ளவர்கள் தான் அதிகமாக கவலை கொண்டுள்ளனர். தங்களுக்கு வரும் ஆபத்து இருக்கிறது என்று மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். வெளியில் போகும் போது இவர்கள் பயத்துடன் தான் செல்கின்றனர். சிலர் பருமனை குறைக்க மிகுந்த பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உடல் பயிற்சி மையங்கள் இப்போது பல மாகாணங்களில் திறக்கப்பட்டு வருகின்றன. சிலவற்றில் மீண்டும் மூடப்பட்டன. இப்படி நிலை நீடித்தாலும், பருமனாக இருப்பவர்கள் இப்போது உடல் பருமனை குறைக்க பகீரதப்ரயத்னப் படுகின்றனர்.