கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தென்மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
கொரோனா வைரஸ் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வரும் 6ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் 7ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். மேலும் தென் மாவட்டங்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் விவசாய சங்கங்கள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.