தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய, குறைய, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார். அரசு அறிவிக்கும் பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றினால், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால், தொற்று பாதிப்பு முற்றிலும் தடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி மைய மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் விரைவில் நிறைவுபெறும் என தெரிவித்தார். மேட்டூர் அணையின் உபரிநீரை கொண்டு, நூறு ஏரிகளை நிரப்பும் திட்டம், 6 மாதங்களில் நிறைவடையும் என முதலமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இ-பாஸ் வழிமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என்றும், இ- பாஸ் வழங்க கூடுதலாக ஒரு பிரிவு ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.