நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 650-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும் வகையில் மருந்துகள் வழங்கப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்கிடும் வகையில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, மல்லி, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட பொருட்களோடு, மூலிகைகளும் சேர்க்கப்பட்டு உயர்ரக மீன் குழம்பு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமாரின் மேற்பார்வையில் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர் ஷாஜகான், நிர்வாகிகள் ஆனந்தன், ரமேஷ், நீலகண்டன் மற்றும் சமையல் வல்லுனர்கள் ஆகியோர் கன்னியாகுமரி பேரூர் செயலாளர் வின்ஸ்டனுடன் இணைந்து மீன் குழம்பை தயாரித்து வழங்குகிறார்கள். அதாவது சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து உயர்ரக மீன்களை கொண்டு வந்து, மூலிகைகள் மற்றும் நோய் எதிர்ப்பு பொருட்களை சேர்த்து உயர்ரக மூலிகை மீன் குழம்பை நாகர்கோவில் தங்கவேல் திருமண மண்டபத்தில் வைத்து தயாரிக்கிறார்கள். இந்த மூலிகை கலந்த உயர்ரக மீன் குழம்பு சாப்பாடை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நேற்று கொரோனா நோயாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமாரபாண்டியன், சங்கர நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.