நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கல்குவாரிக்கு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன.

சவேரியார் கோவில் பகுதியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் இருந்தது. நேற்று காலை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து குமரி மாவட்ட கல்குவாரிக்கு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

வாகன ஓட்டுனர் லாரியை சாலை ஓரத்தில் ஒதுக்கியபோது பாதாளசாக்கடை பணிகளுக்காக தோண்டிய பள்ளத்தில் வாகனத்தின் சக்கரம் சிக்கியது. இதைத்தொடர்ந்து டாரஸ் லாரி சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து போலீசார் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.