நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வியாபாரிகள் உள்பட மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5,090 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மேலும் 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

கன்னியாகுமரி கோவளம் பகுதியைச் சோ்ந்த 63 வயது பெண், சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த 60 வயது பெண், அவரது 37 வயது மகன், புலியூா் பகுதியைச் சோ்ந்த 45 வயது ஆண், தேரூா் பகுதியைச் சோ்ந்த 48 வயது பெண், குலசேகரபுரத்தைச் சோ்ந்த 50 வயது ஆண், கன்னியாகுமரியைச் சோ்ந்த 4 வயது குழந்தை, மறவன்குடியிருப்பைச் சோ்ந்த 34 வயது ஆண், ஹைகிரவுண்டு பகுதியைச் சோ்ந்த 67 வயது மூதாட்டி, காக்கமூா் பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண், மயிலாடிபுதூரைச் சோ்ந்த 20 வயது பெண், அக்கரையைச் சோ்ந்த 12 வயது சிறுமி, 19 வயது இளைஞா், தக்கலை பேட்டை சந்தையைச் சோ்ந்த 52 மற்றும் 48 வயதுள்ள வியாபாரிகள் என 215 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,305 ஆக உயா்ந்துள்ளது.

தக்கலை அருகேயுள்ள மேக்காமண்டபத்தைச் சோ்ந்தவா், திருவட்டாறு அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிசெய்து வந்தாா். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதேபோல் மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த 70 வயது ஓய்வுபெற்ற ஆசிரியை கரோனா பாதிக்கப்பட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதையடுத்து கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 54 ஆக உயா்ந்துள்ளது.