குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. எனினும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக சாவு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று புதிதாக 7 பேரை கொரோனா காவு வாங்கியது. அதாவது நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளையை சேர்ந்த 62 வயது ஆண் கடந்த 21-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதே போல குழிவிளையை சேர்ந்த 76 வயது ஆண் கடந்த 28-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுபோன்று வெள்ளமடத்தை சேர்ந்த 62 வயது பெண்ணும், அழகப்பபுரத்தை சேர்ந்த 76 வயது ஆணும், இனயத்தை சேர்ந்த 60 வயது ஆணும், வடிவீஸ்வரத்தில் ஒரு ஆணும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே கடந்த 2-ந் தேதி ராஜாக்கமங்கலம் அருகே ஒரு மூதாட்டி பிணம் கரை ஒதுங்கியது. இதைத் தொடர்ந்து பிணத்தை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து 150 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், கொரோனா கவனிப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களையும் சேர்ந்து குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,304 ஆனது.






0 Comments