ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிர்த்திய கோபால் தாசுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முக்கிய தலைவர் என்பதால் வட இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகம் ஆகியுள்ளது. உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஒரு நாளில் பதிவாகும் கரோனா பாதிப்பு தற்போது அதிகமாக உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ராமர் கோயிலை கட்டும் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிர்த்திய கோபால் தாசும் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொற்று பாதித்த நிர்த்திய கோபால் தாசுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.