''கொரோனா நோயாளிகளுக்கு, உணவு அளிப்பதற்காக தினமும், 25 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்படுகிறது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., கூறினார்.வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு பின், முதல்வர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கொரோனா இறப்பை குறைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளோம்.
கொரோனா, கட்டுப்பாட்டில் உள்ளது.கொரோனா பாதிப்பால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு அதிகளவில் உள்ளது. இது, இன்னமும் கணக்கிடப்படவில்லை. வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்.பத்திரிகையாளர்களுக்கு, கொரோனா நலத்திட்ட உதவிகள் அதிகம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், நிதி பற்றாக்குறை உள்ளது. மத்திய அரசிடம் எடுத்துரைத்துள்ளோம்.
மத்திய அரசு வழங்கும் என, எதிர்பார்க்கிறோம். கொரோனா நோயாளிகளுக்கு, உணவு அளிப்பதற்காக தினமும், 20 கோடி முதல், 25 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து, நீதிமன்ற உத்தரவை, அரசு முழுமையாக கடைப்பிடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.'விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில், தமிழக அரசை, பா.ஜ., வினர் விமர்சனம் செய்கின்றனரே' என, நிருபர்கள் கேட்டதற்கு, ''வழிபாட்டு தலங்கள் குறித்து, மத்திய அரசின் உத்தரவுகளை, மாநில அரசு செயல்படுத்துகிறது,'' என்றார். தொடர்ந்து, தர்மபுரி சென்ற முதல்வர், அங்கும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.முதல்வரை சந்திக்க வந்த தி.மு.க., - எம்.பி.,தர்மபுரியில் நேற்று மாலை நடந்த, கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்றார்.
முதல்வரை சந்தித்து, வளர்ச்சி திட்டங்களுக்கான கோரிக்கை மனு அளிக்க, தர்மபுரி, தி.மு.க.,- எம்.பி.,செந்தில்குமார், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு மாலை, 5:00 மணிக்கு வந்தார். அவரை, அங்கிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து, தடுத்து நிறுத்தினர். அப்போது, எம்.பி.,க்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தரையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட, எம்.பி., முயன்றார்.
அவரை போலீசார் தடுத்தனர்.எம்.பி., செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கலெக்டருக்கு காலை முதலே எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவித்தேன். ஆனால், அவர் எந்தவித பதிலும் தரவில்லை. முதல்வர் பங்கேற்கும் விழாவில் மனுக்களை வழங்குவதற்காக வந்த என்னை, போலீசார் தடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, முடிவு பெற்ற பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தனர்.
ஆனால், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்களை அனுமதித்துள்ளனர். கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டால்தான், கூட்டத்தில் அனுமதிப்போம் என்ற அரசாணையை காட்டவேண்டும் எ ன நான் கேட்டேன். போலீ சார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.






0 Comments