தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல். ஓட்டுநர் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக பகுதியான குமரி மாவட்டத்தில் இருந்து குமரி கேரள எல்லை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க போலீசார் எவ்வளவு முயற்சி செய்தும் கடத்தல்காரர்கள் பல்வேறு புதிய உத்திகளை பயன்படுத்தி தொடர்ந்து கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் வெட்டுமணி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தினர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. இதைத்தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி தலைமையிலான குழுவினர் சுமார் 6-கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் வைத்து அந்த சொகுசு வாகனத்தை மடக்கி பிடித்தனர். அப்போது ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரிகள் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு அரசு அரிசி கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடிய டிரைவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.