தீயணைப்பு துறை சார்பில் சுசீந்திரத்தில் நடந்த வெள்ள அபாய ஒத்திகையை பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்கள் எப்படி அதில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்பதை தீயணைப்பு துறை சார்பில் சுசீந்திரம் பழையாற்றில் வெள்ள அபாய ஒத்திகையை நடந்தது.
மழை காலங்களில் மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் மிதக்கும் பொருட்களை வைத்து எப்படி தப்பித்து கொள்ள வேண்டும், பாட்டில், சிலிண்டர், மட்டை, வாழை தண்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் வந்த உடன் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் கொடுத்தனர்.

தீயணைப்பு துறை மதுரை மண்டல துணை இயக்குநர் சரவணகுமார் தலைமையில், கன்னியாகுமரி மாவட்ட அலுவலர் சரவணபாபு, உதவி அலுவலர் கார்த்திகேயன், நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை, குழித்துறை நிலைய அலுவலர் விஜயன், தக்கலை நிலைய அலுவலர் ராஜா, குலசேகரம் நிலைய அலுவலர் முகமது சலீம், குளச்சல் நிலைய அலுவலர் ஜீவன்ஸ் கலந்து கொண்டனர். நாகர்கோவில் ஆர்டிஓ மயில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார். ஒத்திகை நிகழ்ச்சிக்கு மதுரையில் இருந்து சிறப்பு கமோண்டோக்கள் 6 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 40 தீயணைப்பு வீரர்களும் ஒத்திகை நிகழ்ச்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.