நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை திறப்பதை முன்னிட்டு காலையில் ஆய்வு செய்யப்பட்டது. மாலையில் வியாபாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. வரும் 7 ம் தேதி முதல் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட உள்ளது. இதனால் வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை மீண்டும் கனகமூலம் சந்தையில் செயல்பட கூடிய வகையில் காலையில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் மாநகர் நல அலுவலர் கின்சால், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாலையில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் போக்குவரத்து கழக அதிகாரிகள், டிராபிக் போலீசார் ஆகியோர் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் வரும் 7 ம் தேதி முதல் மீண்டும் வடசேரி கனமூலம் சந்தை செயல்படுவது குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை நடந்தது. வியாபாரிகள் கடைகளில் குறிப்பிட்ட அளவில் தான் பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும் வெளியில் வைத்து விற்பனை செய்ய கூடாது. மெயின் கேட் மட்டுமே திறந்து இருக்கும் அதன்படி ஒரு வழியாக வந்து ஒரு வழியாக செல்ல வேண்டும் உட்பட பல அறிவுரைகள் வழங்கப்பட்டது.