கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவல், மாணவர்கள் பயணம் செய்வதில் உள்ள சிக்கல் மற்றும் பீகார், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு போன்றவற்றை காரணங்களாகக் கூறி வருகின்றனர்.

பல்வேறு மாநில முதல்வர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் எதிர்கட்சி தலைவர்களும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரவில்லை என மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

களபம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா என்ற மாணவி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் ஹால் டிக்கெட் வராததால் மனஉளைச்சல் அடைந்த அவர் நேற்று முன் தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியை மீட்ட பெற்றோர் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.