புதுச்சேரி வில்லியனூர் அருகே உறுவையாறு வெங்கட்டா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் ராமு (18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் தேவகுரு (11), உறுவையாறு நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (9), பாகூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரபிரியன் (13) ஆகிய 4 பேரும் நேற்று வில்லியனூர் ஆச்சாரியாபுரம் பகுதியில் சங்கராபரணி ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது ராமு ஆற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார். மீன் அகப்படாத நிலையில் தேவகுரு, சஞ்சய், ஹரிகரபிரியன் ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கரையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமு ஆற்றில் குதித்து தேவகுரு, ஹரிகரபிரியன் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார்.

அதில் ஹரிகரபிரியன் மயக்க நிலையில் இருந்தார். சஞ்சய் மாயமானார். இதையடுத்து ராமு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஹரிகரபிரியனை வில்லியனர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது தொடர்பாக மங்கலம் போலீஸார் மற்றும் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயமான சஞ்சயைத் தேடிய நிலையில், அவர் சடலம் கிடைத்தது. இதையடுத்து ஹரிகரபிரியன், சஞ்சய் ஆகிய இருவரின் உடலையும் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.