கேரள மாநில சுகாதாரத் துறை மந்திரி கே.கே.ஷைலஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனாவால் கடந்த மே 7 தேதி மாநிலத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விமானம், ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, பல மாநிலங்களில் இருந்து கேரளத்திற்கு தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருக்கிறது.
எனினும் கேரளத்தில் கொரோனாவின் முதல் கட்டத்தில் 30% ஆக இருந்த பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் பாதிப்பு 15% ஆக குறைந்து விட்டது. இதில் தொடர்புகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன.
கொரோனா தொற்று காரணமாக பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மே 11 அன்று அவர் வளைகுடா நாட்டில் இருந்து வந்தவர். ஏற்கெனவே கடுமையான நீரிழிவு மற்றும் உடல் பருமனால் அவதிப்பட்டார். வென்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுவரை மாநிலத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை எங்களது மருத்துவக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் கொரோனா பரவல் தொடர்புகளை கண்டறிவதில் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்டோரின் அனைத்து தொடர்புகளையும் கண்டறிந்து நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






0 Comments