மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது அலுவலகம் பூட்டப்பட்டது. காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர் விசாரணை அதிகாரியாக சென்ற மண்டைக்காடு, வெள்ளிச்சந்தை காவல் நிலையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதற்கிடைய இன்ஸ்பெக்டர் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட மண்டைக்காடு, வெள்ளிச்சந்தை மற்றும் மணவாளக்குறிச்சி காவல்நிலையங்களில் பணிபுரிந்து வந்த போலீசாருக்கு தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனால் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் 3 காவல்நிலையங்களை சேர்ந்த 43 போலீசாருக்கு நேற்று முன்தினம் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குருந்தன்கோடு, முட்டம் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.
இதனையடுத்து பெண் போலீசார் உள்பட 43 பேரும் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் தனிமைபடுத்தப்பட்டனர். இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வந்தது. அதில் 43 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. இதனால் அவர்கள் குடும்பத்தினர், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் 43 பேரும் 10 நாட்கள் அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னரே இவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவார்கள்.
கொரோனா பாதிப்பையொட்டி மணவாளக்குறிச்சி பகுதியில் அடைக்கப்பட்டுள்ள கடைகள் சுகாதாரத்துறை அனுமதி பெற்று இரு தினங்களுக்குள் மீண்டும் செயல்படத்துவங்கும் என குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தெரிவித்தார்.






0 Comments