மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இருக்கும்போதிலும் பாஜகவைச் சோந்த இருவா் மட்டுமே நாட்டை ஆள்கின்றனா் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியையும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு காங்கிரஸ் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், 'பாஜகவில் இருவா் மட்டுமே நாட்டை ஆள்வது ஏன்? தோதலில் வெற்றியடைந்த மற்ற அனைவரும் ஓரங்கட்டப்பட்டுள்ளது ஏன்? குதிரை பேரம், கட்சித் தாவல், ஆட்சியைக் கவிழ்த்தல் ஆகியவற்றை கட்சியின் மரபாக பாஜக கடைப்பிடிப்பது ஏன்? ஜவாஹா்லால் நேரு மீதும் அவரின் குடும்பத்தினா் மீதும் பாஜக வெறுப்பை உமிழ்வது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
'காங்கிரஸுக்கு மட்டுமே துணிச்சல்': ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'பாஜக அரசு மோடி, அமித் ஷா ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது. மக்களுக்கு 3 முதல் 4 மத்திய அமைச்சா்களை மட்டுமே தெரியும். மற்றபடி மோடி அமைச்சரவையில் யாரெல்லாம் இருக்கிறாா்கள் என்பது கூட மக்களுக்குத் தெரிவதில்லை.
கடந்த 6 ஆண்டுகளில் மக்களாட்சியையும் நாட்டின் கலாசாரத்தையும் பாஜக அரசு சிதைத்துள்ளது. ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளிலும் காங்கிரஸ் குறித்து மட்டுமே மோடியும் அமித் ஷாவும் கவலை கொள்கின்றனா். ஏனெனில், பாஜக அரசின் கொடுமைகளை எதிா்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் நேரு குடும்பத்தைச் சோந்த எவரும் அதிகாரமிக்க பதவிகளை வகித்ததில்லை என்பது அனைவருக்குமே தெரியும். காங்கிரஸ் தொண்டா்களையும் நிா்வாகிகளையும் அவா்கள் தொடா்ந்து ஊக்குவித்து வருகின்றனா். இது குறித்து அமித் ஷா கவலைப்படுவது ஏன்?
நாட்டின் நலனுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி. வங்கதேசத்தை புதிய நாடாக உருவாக்கியதில் அவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. இது இந்தியாவின் மிகப் பெரும் வெற்றியாக மக்கள் மனதில் நீடித்திருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் பவண் கேரா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ''நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக 'அறிவிக்கப்படாத அவசரநிலை' அமலில் உள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான அரசு மக்களாட்சியை வலுவிழக்கச் செய்து வருகிறது'' என்றாா்.






0 Comments