குமரியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த காசி மீது சமூக வலைத்தளங்கள் மூலமாக இளம்பெண்களை தொடர்புகொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனியாக இருப்பதை ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையொட்டி பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரில் காசி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நான்கு பெண்களும் ஒரு இளைஞரும் கொடுத்த புகாரில், ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் பலாத்கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என ஆறு வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டது. இதனிடையே காசி குண்டர் சட்டத்தில் கைதானான். மேலும் இந்த வழக்குகள் சிபிசிஐடி போலிஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் காசியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டதன் அடிப்படையில் ஐந்து நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காசியின் சிபிசிஐடி காவல் முடிந்ததை தொடர்ந்து காசி மற்றும் அவரது நண்பர் டைசன் ஜினோ ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காசி கொடுத்த தகவலின் அடிப்படையில் கணேசபுரம் பகுதியில் அவரது வீட்டின் அருகில் உள்ள தினேஷ் என்ற வாலிபரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தினேஷிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த போனை ஆய்வு செய்த போது பல ஆபாச படங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. காசி உடன் கூட்டணி சேர்ந்து இவரும் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷை கைது செய்த போலீசார் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து பறிமுதல் செய்த செல்போனை சைபர் கிரைம் போலீசாரிடம் ஆய்வுக்காக கொடுத்துள்ளனர். இதன் மூலம் காசியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.