நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஆஷா அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் ஆவார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்த இவர், தனது திருமணத்திற்கு பிறகு கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு கேடருக்கு தன்னை மாற்றி கொண்டார். இவரது கணவர் பி.விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக தற்போது பணியாற்றி வருகிறார்.
கேரள மாநிலம் கருநாகப்பள்ளியை சேர்ந்த அஜித்குமார் – ஜெயஸ்ரீ தம்பதிகளின் மகளான ஆஷா அஜித் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கேரள மாநில அளவில் முதலிடம் பெற்றவர் ஆவார். திருவனந்தபுரம் பட்டயம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 பயின்ற இவர் திருவனந்தபுரம் தனியார் கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்தார்.
கேரள பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பயின்றவர். இவரது தந்தை வி.ஆர்.அஜித்குமார் கேரள தகவல் மக்கள் தொடர்பு துறையில் கூடுதல் இயக்குநராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர் ஆவார். கேரள சிவில் சர்வீஸ் அகாடமியில் 2012-13 ஆம் ஆண்டில் சேர்ந்து பயிற்சி பெற தொடங்கிய இவர், அகில இந்திய அளவில் 40-வது இடத்தில் 2015-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார்.
பொருளாதாரத்துறை உதவி செயலராக 2017-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை பணியாற்றி இருந்தார். இவரது கணவர் விஷ்ணு சந்திரன், நாகர்கோவில் சப் கலெக்டராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டு பணியாற்றி இருந்தார். ஆஷா அஜித், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் சப் கலெக்டராக பணியாற்றிவர், பின்னர் விடுமுறையில் இருந்த அவர், தற்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






0 Comments