நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தவர் சரவணக்குமார். இவர் மீது வியாபாரிகள், பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆஷா அஜித் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டார். இவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நியமிக்கப்பட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
இவர் நேற்று மாலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மாநகர நகர்நல அதிகாரி கின்ஷால் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ஆஷா அஜித், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்போதைய சூழலில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளில் முதலில் கவனம் செலுத்துவேன். பின்னர் மாநகராட்சி பகுதிகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்“ என்றார்.