காதலித்து ஏமாற்றியதால், சேர்ந்து எடுத்த போட்டோக்களை அனுப்பி மிரட்ட நினைத்தேன் என்று நர்சை மிரட்டிய வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் மர்பின் தனேஷ் (வயது 26). இவர் டிப்ளோமா படித்துள்ளார். இவருக்கும், அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
சாதாரணமாக பழகியவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். அப்போது செல்போனில் சேர்ந்து இருந்தவாறு போட்டோக்கள் எடுத்துள்ளனர். இதற்கிடைய பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்திருந்த அந்த பெண்ணுக்கு குவைத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் வெளிநாடு சென்றார்.
தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மர்பின் தனேஷுடன் பேசுவதை இளம்பெண் நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்பின் தனேஷ், தன்னை ஏமாற்ற நினைத்தால் இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்களை நெட்டில் வெளியிடுவேன். அப்படி வெளியிடாமல் இருக்க இருக்க பணம் தரவேண்டும் என மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
மேலும் போலி பேஸ்புக் முகவரியில் இளம்பெண்ணுடன் இருந்த சில போட்டோக்களை மர்பின் தனேஷ் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, இளம்பெண் தனது தாயாருக்கு தகவல் கொடுத்தார். அவர் தாயார் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து மர்பின் தனேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசில் மர்பின் தனேஷ் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இருவரும் காதலித்தோம். அவர் வெளிநாடு செல்ல நான் உதவி செய்தேன். புதிய மொபைல் வாங்கி கொடுத்தேன். அவரது பழைய மொபைலை நான் வைத்திருக்கிறேன். எனக்கு மொபைல் பற்றி நன்றாக தெரியும் என்பதால், அதில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட போட்டோக்களை பார்த்தேன்.
அப்போது இளம்பெண்ணுடன் இருந்த சில வாலிபர்களை பற்றி கேட்டபோது என்னை திட்டினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் அவரை கண்டித்தேன். என் மீதுள்ள ஆத்திரத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.
அவருடன் சேர்ந்து இருந்த நாட்களை மறக்க முடியவில்லை. என்னை வெறுக்க தொடங்கியதால், கோபமடைந்த நான், அவருடன் இருந்த போட்டோக்களை அனுப்பி மிரட்டினேன். என்னை திருமணம் செய்ய வேண்டும் என கேட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.






0 Comments